×

இயற்கைக்கு மாறுங்கள்… அழகாய் மிளிருங்கள்!

நன்றி குங்குமம் தோழி

ஒவ்வொரு பெண்ணும் தான் உடுத்தும் உடை மற்றும் தங்களின் தோற்றம் மேல் தனிப்பட்ட கவனம் செலுத்துவது என்பது இயற்கை. காரணம், அவர்கள் மற்றவர் கண்களுக்கு தான் எப்போதும் பளிச்சென்று இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். அதற்காக தனிப்பட்ட கவனம் செலுத்தி வருவார்கள். தங்கள் முகம் பளிச்சென்று இருக்க வேண்டும். கூந்தல் கடல் அலை போல் அழகாக இருக்கவேண்டும் என்று நினைப்பதுண்டு. அதற்கு அவர்கள் பல அழகு சாதனப் பொருட்களை நாடுகிறார்கள். இவை எல்லாம் ரசாயனம் நிறைந்தவை என்றாலும் அதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள்.

நம்மை அழகாக காட்சிப்படுத்தும் இந்த அழகு சாதனங்கள் ஒரு காலக்கட்டத்திற்கு பிறகு அவை நமக்கு கெடுதலே செய்கிறது. சிலருக்கு அலர்ஜியினை கூட ஏற்படுத்தும். இதனை காலப்போக்கில் புரிந்து கொண்ட பெண்கள் இயற்கை சார்ந்த அழகு பொருட்களுக்கு மாறி வருகிறார்கள். அதன் அடிப்படையில் முழுக்க முழுக்க இயற்கைப் பொருட்களை பயன்படுத்தி சருமம் மற்றும் தலைமுடிக்கு அழகு சாதனப் பொருட்களை தயாரித்து வருகிறார் சென்னையை சேர்ந்த சக்திமது.‘‘நான் பொறியியல் பட்டதாரி.

திருவண்ணாமலைதான் என் சொந்த ஊர். திருமணத்திற்கு பிறகு சென்னையில் செட்டிலாயிட்டேன். திருமணத்திற்கு பிறகு முழு நேர இல்லத்தரசியாக தான் இருந்தேன். ஆனால் எனக்கு ஒரு நிறுவனத்தில் வேலை பார்ப்பதைவிட சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. கோவிட் காலம் தான் எனக்கு இதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனால் அந்த காலம் எனக்கு பெரிய இழப்பை தந்தது. என் அப்பாவை நான் அந்த சமயத்தில் தான் இழந்தேன். அவரின் இறப்பு என்னை பெரிய அளவில் பாதித்தது.

அந்த சோகத்தில் இருந்து வெளியே வரவே நான் ரொம்பவே தவித்தேன். அப்போது என் கணவர் தான் இதில் இருந்து நீ வெளியே வர வேண்டும் என்றால், நீ வேறு ஒரு விஷயத்தில் உன் மனதை செலுத்த வேண்டும் என்று கூறினார். அந்த முயற்சியில் துவங்கியது தான் என்னுடைய ‘திக்ரூட்’ இயற்கை அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம்’’ என்றவர் தொழிலில் இறங்குவதற்கு முன் முறையாக ஆயுர்வேத காஸ்மடாலஜி குறித்து பயின்றுள்ளார்.

‘‘ஒரு தொழில் துவங்கும் போது அது பற்றி முழுமையா தெரிந்து வைத்திருக்கணும். அதனால்தான் படிச்சேன். அதன் பிறகு 6 மாத காலம், நானே வீட்டில் ஒவ்வொரு பொருட்களை தயாரித்துப் பார்த்தேன். அது சக்சஸாகவே, அதன் பிறகு தான் இதனை ஒரு நிறுவனமாக அமைத்தேன். ஆரம்பத்தில் எனக்கு என்ன தொழில் செய்வதுன்னு தெரியல. பல தொழில்கள் குறித்து பட்டியலிட்டேன். அப்போது தான் ஒவ்வொரு பொருட்களிலும் ஏதாவது ஒரு சிறிய அளவில் கலப்படம் இருக்கிறது என்று புரிந்தது.

சாப்பிடும் சாப்பாடு முதல் நான் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களிலும் கலப்படம் உள்ளது. இனி வரும் சமுதாயம் இயற்கை முறையில் தங்களின் வாழ்க்கையை பின்பற்ற வேண்டும் என்று விரும்பி தான் நான் ஆயுர்வேத காஸ்மடாலஜி படிச்சேன். அதில் இயற்கை முறையில் பலவிதமான அழகு பொருட்களை தயாரிக்கலாம் என்பதை தெரிந்து கொண்டேன். என்னுடைய பொருட்களுக்கு பெரும்பாலும் ஆறு மாதம்தான் வாலிடிட்டி.

மேலும் அனைத்தும் இயற்கைப் பொருட்கள் என்பதால் எந்த விதத்திலும் பாதிப்புகள் ஏற்படுத்தாது. மக்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ளவும், கூந்தல் பராமரிப்பிலும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் அதற்காக மார்க்கெட்டில் கிடைக்கும் பொருட்களில் ரசாயனம்தான் அதிகமாக கலக்கப்படுகிறது. நான் எந்த வித செயற்கை பொருட்களையும் பயன்படுத்துவதில்லை.

மஞ்சிஸ்டி, குங்குமப்பூ போன்ற மூலிகைகள் மற்றும் வாசனாதி எண்ணை போன்ற பொருட்கள்தான் என்னுடைய அழகு பொருட்களில் பெரும்பாலும் இருக்கும். குங்குமாதி தைலம் கூட இயற்கை முறையில் தான் தயாரிக்கிறேன். எங்களுடைய எல்லா தயாரிப்பிலும் இயற்கையோடு ஒத்துதான் தயார் செய்கிறோம். ஷாம்புகூட செம்பருத்திபூவினைக் கொண்டுதான் தயார் செய்கிறோம். படித்து முடித்ததும், நான் தயாரித்த பொருட்களை என் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தான் கொடுத்தேன்.

அவர்கள் அதைப் பயன்படுத்தி நன்றாக இருப்பதாக தெரிவித்தார்கள். அதில் அவர்கள் எந்த பொருட்களில் நல்ல பலன் கிடைத்தது என்று சொன்னார்களோ அதைக் கொண்டு தான் முதன் முதலில் என் தொழிலை துவங்கினேன். என்னுடைய தயாரிப்புகளில் முக்கியமானது குங்குமாதி தைலம் மற்றும் குங்குமப்பூ ஜெல். இதனை முகத்திற்கு பயன்படுத்தலாம். அதனால் சருமத்தில் சுருக்கம் குறைந்து மினுமினுப்பாக மாறியுள்ளதாக பலர் தெரிவித்தனர்.

அதேபோல் ஷாம்புவில் சல்பேட் சேர்ப்பதில்லை. அதனால் நுரை வராது. முதலில் பயன்படுத்தியவர்கள் நுரை வரவில்லை என்று கூறினார்கள். ஆனால் தொடர்ந்து பயன்படுத்திய பிறகு அவர்களின் தலைமுடி மிருதுவாகவும், பளபளப்பாகவும், தலைமுடி உதிர்வும் குறைந்து இருப்பதைப் பார்த்து சந்தோஷப்பட்டனர். நான் வீட்டிலேயே தான் இதனை தயாரிக்கிறேன். எங்களுக்கு சொந்தமாக திருவண்ணாமலையில் பண்ணை இருப்பதால், அங்கேயே எனக்கு தேவையான அனைத்து மூலிகைகளையும் பயிர் செய்து கொள்கிறேன்’’ என்றவர் அவர் தயாரிக்கும் பொருட்களைப் பற்றி விவரித்தார்.

‘‘குங்குமாதி தைலத்தில் மஞ்சிஷ்டி, நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய், குங்குமப்பூ, சந்தனம் போன்றவற்றை சேர்த்து 10 மணி நேரம் ஊற வைத்து செய்வதால் இரவு நேரத்தில் அப்ளை செய்து படுத்தால், வயது காரணமாக ஏற்படும் சுருக்கங்கள் மறைந்து தோல் மென்மையாக மாறும். செம்பருத்தி ஷாம்புவில் முளை கட்டிய வெந்தயம் மற்றும் எங்கள் பண்ணையில் இருக்கும் செம்பருத்தி பூ மற்றும் இலைகளை பயன்படுத்தி செய்கிறோம். குழந்தைகளுக்கும் உபயோகிக்கலாம்.

அடுத்து பாடி லோஷன். இதற்கு மரப்பட்டையை க்ரீம் போல செய்து தருவதால் உடலுக்கு அவ்வளவு நன்மை செய்யும். நல்பமராதி லேபம், மஞ்சிஷ்டி, குங்குமப்பூ போன்றவை எண்ணையில் சேர்த்து தயாரிக்கப்படும் சருமத்திற்கான சீரம் எண்ணை. இது சருமத்தை பளிச்சென்றாக்கும். இது தவிர அதிமதுரம் க்ரீம், அவகடோ க்ரீம், குங்குமப்பூ ஜெல் போன்றவையும் உள்ளது. இது தவிர காலுக்கான க்ரீம், மருதாணி, மயில் துத்தம் போன்றவை கொண்டு தயாரிக்கப்பட்டவை.

இவற்றால் கால் ஆணி, காலில் உள்ள கருப்பு நிறம் போன்றவை மாறும். நான் தனிப்பட்ட முறையிலும் விற்பனை செய்கிறேன். மேலும் கண்காட்சி போன்ற இடங்களில் ஸ்டால் அமைத்து அதன் மூலமும் என் பொருட்களை விற்பனை செய்கிறேன். தற்போது காதி நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளோம். சென்னையைப் பொறுத்தவரை எல்லா இடங்களிலும் எனக்கான வாடிக்ைகயாளர்கள் உள்ளனர். மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை, கோயம்புத்தூர் மட்டுமில்லாமல் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் இருந்தும் எனக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

ஆரம்பத்தில் நான் மட்டும்தான் இதனை பார்த்து வந்தேன். ஆர்டர் அதிகமானதால், தற்போது ஆட்களை வேலைக்காக நியமித்திருக்கிறேன். என்னுடைய பிசினசிற்கு வாடிக்கையாளர்கள் ஒரு பக்கம் சப்போர்ட் என்றால் மறுபக்கம் என் கணவர் மற்றும் குழந்தைகள் மிகவும் உறுதுணையாக இருக்காங்க. அதனால் எனக்கு மேலும் பல பொருட்களை இயற்கை முறையில் தயாரித்து தொழிலை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்று எண்ணம் உள்ளது’’ என்றார் சக்திமது.

தொகுப்பு: சித்ரா சுரேஷ்

The post இயற்கைக்கு மாறுங்கள்… அழகாய் மிளிருங்கள்! appeared first on Dinakaran.

Tags : Kumkum Doshi ,Dinakaran ,
× RELATED உன்னத உறவுகள்